அரசை விமர்சிக்காமல் இருக்க முடிந்தால் இருங்க , அல்லது வெளியேறுங்கள்!வெளியேறாது போனால் நீக்குவேன்! கோட்டாபய ராஜபக்ஷ
அரசாங்கத்திற்குள்ளேயே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இருந்தால், அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்ந்து எதிர்க்கட்சியின் வேலையை செய்யுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அப்படியில்லாது போனால் அவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்குவேன் என கடுமையான தொனியில் ஜனாதிபதி பேசியுள்ளார் .
அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில், ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவைப் பத்திரம் இலக்கம் 49 ஐ வாசித்ததுடன், அரசாங்கத்தினால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி அடங்கிய நிதி அமைச்சரின் அமைச்சரவைப் பத்திரத்தை வாசித்தார்.
அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இவ்வாறான நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும், மக்கள் மத்தியில் ஒரு கருத்தை உருவாக்குவதற்குப் பதிலாக அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து அரசாங்கத்தை விமர்சிக்க இடமளிக்க முடியாது. அப்படியானோர் எதிர் கட்சி பகுதிக்கு சென்று அமரலாம்.
தனக்கெதிராக 50 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களுடன் இணைந்து கொள்ள விரும்பினால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அமைச்சரவை அமைச்சர்களான விமல், உதய, வாசு ஆகியோர் ஜனாதிபதி இவ்வாறு கடுமையான கருத்தை வெளியிட்ட போது மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும் என்பது மற்றொரு சிறப்பு.