அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை.. வைரலான போட்டோவால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
ராசிபுரம் நகராட்சி 8வது வார்டு பகுதியில் பயனற்று இருந்த அடிபம்பு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 8வது வார்த பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே ராசிபுரம் – புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அடிபம்ப் செயல்படாமல் உள்ளது. .இந்த நிலையில் நகராட்சிகளின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 8வது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமலும், அதனை சரிசெய்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தாமலும் அப்படியே சாலையை அமைத்து உள்ளனர்.
அந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்காக அதனை சரிசெய்யாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களுக்கு மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தாலும் கூட சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் இந்த அடிபம்பு தற்போது உள்ளது. அதனை அகற்றி சாலை அமைக்கப்பட்டிருந்தால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும்.எனவே, அந்த அடிபம்பை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் அல்லது அதனை அகற்ற வேண்டும். வீணாக பொதுமக்களின் வரிப்பணத்தை விரையம் செய்யக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் 8வது வார்டில் பயனற்ற அந்த அடிபம்பை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை சரி செய்து பொது மக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.’