லஞ்சமும், ஊழலும் முஸ்லிம் உலகிற்கு எதிரான தீயசக்திகள்.
பெருகும் லஞ்சம் மற்றும் ஊழலும், பாலியல் குற்றங்களும் தான் முஸ்லிம் உலகிற்கு எதிரான முக்கிய தீயசக்திகள்,” என பாக், பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு நடந்தது. இதில் பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: நம் சமூகத்தில் லஞ்ச ஊழல், பாலியல் கொடுமை என இரு வகை குற்றங்கள் பெருகி வருகின்றன. பாலியல் பலாத்காரம், குழந்தைகளிடம் பாலியல் கொடுமை ஆகிய குற்றங்கள் 1 சதவீதம் மட்டுமே வெளி உலகிற்கு தெரிகின்றன; 99 சதவீத குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. இதை எதிர்த்து முஸ்லிம் சமுதாயம் போராட வேண்டும்.
இதேபோல லஞ்ச ஊழலும் நமக்கு எதிரான மற்றொரு தீய சக்தி. லஞ்ச ஊழலை ஒழிக்க சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம். துரதிர்ஷ்டவசமாக காலமெல்லாம் லஞ்ச ஊழலில் திளைத்திருக்கும் ஒரு தலைவர் கிடைத்தால், சமுதாயமும் லஞ்ச ஊழலை ஏற்றுக் கொள்கிறது. இணையத்தில் ஆபாசக் காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன; அவற்றில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை காக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் பாக்., முன்னாள் பிரதமரும், லஞ்ச ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவருமான நவாஸ் ஷெரீப் பெயரை குறிப்பிடாமல் இம்ரான் கான் பேசினார்.