வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்….
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி தலைமையில் நேற்று (4) கடற்றொழில் அமைச்சரை சந்தித்த கற்பிட்டி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
கடற்பிட்டியை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 23 இழுவைமடி படகுகள் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் இறால் பிடியில் ஈடுபட்டு வந்ததாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச் சூழல் தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக, தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், குறித்த வழக்கு தொடர்பாகவும் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.