2-வது டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்கு.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் ரகானே, புஜாரா ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரகானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி தனது 2-வது இன்னிங்சில் தற்போது பேட் செய்து வருகிறது.