நீட் விவகாரத்தில் ஆளுநர் சட்ட கடமையை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பாமல், தமிழக ஆளுநர் தனது சட்டக் கடைமையை நிறைவேற்றாமல் தாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்று நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு புதன்கிழமை டி.ஆர். பாலு உள்பட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், “நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பாமல் ஆளுநர் மிகவும் தாமதம் செய்து வருகிறார். இதனால், அவருக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர், இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு புதன்கிழமை கூறியதாவது:
நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரும் மசோதா செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தியிருந்தார். ஆனால், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 200, 201-இன் அடிப்படையில், அந்த மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும். வேறு மாற்று முடிவை அவர் எடுக்க முடியாது.
இந்த நிலையில், அவர் தனது பதவிக்குரிய சட்டக் கடைமையை நிறைவேற்றாமல் இருந்து வருவது கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த இந்தத் தவறுக்காக ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். நீட் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தோம். இதுவரை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனிடையே, குடியரசுத் தலைவரிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கை மனுவுக்கு உடனடியாக பதில் கடிதம் வந்தது. அதில், எங்களது கோரிக்கை மனு நேரடியாக உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு உள்துறை அமைச்சரிடமிருந்து எங்களுக்கு பதில் ஏதும் வரவில்லை. எங்களை அழைக்கவும் இல்லை. இதனால், அவருக்கு மீண்டும் ஓர் கடிதத்தை அனுப்பியுள்ளோம். அதில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உரிய உத்தரவுகளை அவர் பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் இணைந்துள்ளோம். தமிழக மாணவர்கள் சமுதாயத்துக்காக மாநிலத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முதல்முறையாக குரல் கொடுக்கின்றனர். இதனால், இந்தக் குழுவை உள்துறை அமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றார் டி.ஆர். பாலு. பேட்டியின்போது, எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், திருமாவளவன், வெங்கடேசன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.