‘கொரோனா தொடர்பான மருந்துகளை இருப்பில் வையுங்கள்’ : மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் போதுமான மருந்துகளை இருப்பில் வைக்குமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் மூன்றாவது அலை உச்சமடைவதற்கு முன்பாக அதிகபட்ச தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஜன.1ம் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை சமாளிக்க மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திப்படும் நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார். சுகாதார உள்கட்டமைப்பை சரியான நேரத்தில் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், கையிருப்புப் பற்றாக்குறையைத் தவிர்க்க, சோதனை பொருட்கள் மற்றும் கிட்கள் (ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவி ஆகிய இரண்டும்) போன்ற தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, போதுமான அளவில் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொடர்பான மருந்துப் பொருட்களை அதிக எண்ணிக்கையில் இருப்பில் வைக்குமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக சளி சிரப்புகள், பாராசிட்டமால் மாத்திரை, விட்டமின் சி, ஸிங்க் மாத்திரைகள், அசித்ரோமைசின், இவர்மெக்டின் உள்ளிட்டவை இருப்பில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் மருந்து நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளளது.

இந்தியாவில் நேற்று கடந்த 199 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 58,097 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,14,004 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.