மஹிந்தவை ஓரங்கட்டவே சுசிலின் பதவி பறிப்பு! – சம்பிக்க கூறுகின்றார்
“பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாகச் சுசில் பிரேமஜயந்த இருக்கின்றார். அரசிலிருந்து மஹிந்தவை ஓரங்கட்டவே அவரின் சகாவான சுசில் பிரேமஜயந்தவின் கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பறிக்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சரவையின் கூட்டுத் தலைமையை ஜனாதிபதியும், பிரதமரும் வகிக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெறாமலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரின் சகாக்களும் சுயமாக முடிவெடுத்து சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பறித்தெடுத்துள்ளனர். இது இந்த அரசின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாகும்.
மஹிந்தவின் தீவிர விசுவாசியாகச் சுசில் இருக்கின்றார். அரசிலிருந்து மஹிந்தவை ஓரங்கட்டவே அவரின் சகாவான சுசிலின் இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிகாரச் சமர் மூண்டுள்ளது. எனவே, ராஜபக்ச குடும்ப அரசு விரைவில் கவிழும் என்பது திண்ணம்” – என்றார்.