பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவனுக்கு யாழ். பல்கலைக்குள் நுழையத் தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள்நுழைய முடியாதவாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் மீதே விஞ்ஞான பீடாதிபதியால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞான பீட பீடாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.