ராஜபக்ச அரசை விரைவில் அடித்து விரட்டுவர் மக்கள்! – ராஜித
“நாட்டு மக்களை நடுவீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது ராஜபக்ச அரசு. இந்த அரசை மக்கள் விரைவில் அடித்து விரட்டுவர்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராஜித எம்.பி., இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க வேண்டாம் எனவும், அவர் தலைமையிலான அரசை ஆட்சியில் ஏற்ற வேண்டாம் எனவும் அன்று நாட்டு மக்களிடம் நாம் கேட்டிருந்தோம். ஆனால், மக்களில் பலர், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கினர்; அவர் தலைமையிலான அரசை நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், இறுதியில் நடந்தது என்ன?
இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நடுவீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது ராஜபக்ச அரசு. நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துள்ளது. பட்டினிச் சாவை நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த அரசை மக்கள் விரைவில் அடித்து விரட்டுவர். சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலரும்” – என்றார்.