இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை – பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
நாட்டின் நிதித் தலைநகரான மும்பை, அதிநவீன வாட்டர் டாக்ஸி சேவைகளை இயக்குவதன் மூலம் புதிய போக்குவரத்து தீர்வைப் பெற உள்ளது.
மும்பை நகருக்கும் 30 கிமீ தொலைவில் உள்ள நவி மும்பை பகுதிக்கும் இடையே நீர்வழிப்பாதையில் வாட்டர் டேக்ஸி சேவையை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. நிதின் கட்கரி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பின்னர் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது. இத்திட்டமானது மும்பை துறைமுக கழகம், மகாராஷ்டிரா மேரிடைம் வாரியம், நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகளுக்கிடையான கூட்டு முயற்சி ஆகும்.
முதல் கட்டமாக Ferry Wharfல் உள்நாட்டு குரூஸ் டெர்மினல் (DCT) மற்றும் பல்லார்ட் பகுதியில் உள்ள சர்வதேச குரூஸ் டெர்மினல் (ICT) ஆகிய இரு முனையங்களுக்கு இடையே இந்த வாட்டர் டேக்ஸி சேவை தொடங்க உள்ளது. மூன்று நிறுவனங்கள் இந்த வாட்டர் டேக்ஸி சேவையை அளிக்க உள்ளன. மேலும் ஒரு நிறுவனம் அடுத்த 2, 3 மாதங்களில் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்டர் டேக்ஸி சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த வாட்டர் டேக்ஸி சேவை மூலம் ஏற்கனவே மும்பை, நவி மும்பை பகுதிகளை இணைக்கும் சாலை, ரயில் போக்குவரத்துடன் தற்போது நீர்வழிப் போக்குவரத்தும் இணைய இருக்கிறது. மேலும் இந்த நீர்வழிப்போக்குவரத்தின் மூலம் நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் 25 நிமிட பயண நேரத்தில் இணைக்கப்படும். பொதுவாக இப்பகுதிகளுக்கு செல்ல சாலை மார்க்கமாக அதிக நேரம் செலவிட வேண்டும். போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருக்கும்.
கட்டணம் எவ்வளவு?
இந்த வாட்டர் டேக்ஸி சேவையை ரூ.200 முதல் ரூ.700 முதலான கட்டணத்தில் பெறலாம் என Infinity Harbour Service நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பயண அட்டைகளும் தரப்படும் என கூறியுள்ளனர்.
அதிவேகம் கொண்ட இந்த படகுகளில் ஏசி வசதியும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இது அனைத்து கால சூழல்களிலும் இயங்கும் தன்மை கொண்டது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கார் போன்றவற்றையும் இவற்றில் எடுத்துச் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
இணைக்கப்படும் பகுதிகள்
வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்பட்ட பின்னர் தரம்தர், தானே, கன்ஹோஜி ஆங்ரே தீவு, கரஞ்சா, கரஞாடே, பெலாபூர், ஐரோலி, வஷி, நெருல், கந்தேரி தீவுகள் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் போன்ற பகுதிகளுக்கும், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக புகழப்படும் எலிஃபண்டா தீவுகளுக்கும் இந்த வாட்டர் டேக்ஸி சேவை நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.
நீர்வழிப் பாதையில் வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்பட இருப்பதால் மும்பை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.