செங்கல்பட்டை பதறவைத்த இரட்டைக் கொலை – போலீசார் தீவிர விசாரணை
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செங்கல்பட்டு நகர காவல்நிலையம் அருகே கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.
இதில் நிலைதடுமாறிய கார்த்திக்கை சரமாரியாக வெட்டி தலையை உரு தெரியாமல் சிதைத்துவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்திக் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தப்பியோடிய மர்ம கும்பல் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ்( 22) என்பவர் டிவி பார்த்து கொண்டிருந்த போது அதே கும்பல் மகேஷை வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோட்டம். இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய கும்பல் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.தற்போது செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தினா என்ற தினேஷ் மாது என்ற மாதவன் மிஸ் கட் என்ற மைதீன் ஆகியோர் இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.