பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

பழனி மலைக்கோயிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
தமிழக அரசு ஒமிக்ரான் மற்றும் கொரோனா மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முருக பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தைப்பூசத் திருவிழா நடைபெறுமா என்ற அச்சத்தை பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருக்கோயில் சார்பில் பக்தர்களை விரைவாக தரிசனம் செய்து அடிவாரத்துக்கு இறக்கினாலும் பக்தர்கள் கூட்டம் குறைவின்றி உள்ளது.
இரவு நேரமாகியும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வரிசைகளில் காத்திருந்தனர். இரவு தங்கத்தேர் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்த பக்தர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பேருந்து நிலையத்திலும், கிரிவீதி, அடிவாரத்திலும் பக்தர்கள் ஏராளமானோர் காத்திருந்தனர்.