வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – மத்திய அரசு உத்தரவு

இந்தியாவிற்கு வருகை தரும் அனைத்து சர்வதேச பயணிகளும் ஒரு வாரத்திற்கு கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவக்கூடிய மாறுபாடு உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஆபத்தில் உள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கான மாதிரிகளை வரும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய விதிகளின்படி சோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, பரிசோதனை செய்தவர்கள் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் வந்த எட்டாவது நாளில் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனையில் யாருக்கேனும், தொற்று பாதிப்பு உறுதியானால், அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, தொற்று பாதிப்பு உறுதியானவர்களுக்கு தனிமைப்படுத்தலில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் உயரத் தொடங்கியது. தற்போது வரை 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஓமைக்ரான் பரவியிருக்கிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 91,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,17,100 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,52,26,386 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 28% கூடுதலாகும்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,265 பேரும், மேற்குவங்கத்தில் 15,421 பேரும், டெல்லியில் 15,097 பேரும், தமிழகத்தில் 6,983 பேரும், கர்நாடகாவில் 5,031 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. இதுவரை 2,630 ஆக இருந்த ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இன்று 3,007 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1.199 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 377 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.