பாடலாசிரியர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்.
சூர்யா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘மெளனம் பேசியதே’ படத்தின் ‘என் அன்பே.. என் அன்பே’ பாடல் மூலம் 2கே கிட்ஸ் காதலர்களிடமும் தனது வரிகளால் பேசிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் காமகோடியான். இவரின் வரிகளில் சூப்பர் ஹிட் அடித்த இப்பாடல் பலரின் ரிங்’தேனாய்’ இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எம்.எஸ்.வி முதல் இளையராஜா, தேவா, யுவன் என பலரின் இசையில் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
’மரிக்கொழுந்து’ படத்தின் ’கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு’, நினைக்கத் தெரிந்த மனமே’ படத்தின் ’எங்கெங்கு.. நீ சென்ற போதும்’, ’கண்ணுக்கும் கண்ணுக்கும் காதல்’,’ராஜகுமாரன்’ படத்தின் ’செம்பருத்தி பெண்ணெருத்தி’, ’தங்க மனசுக்காரன்’ படத்தின் ‘பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ என பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். 76 வயதாகும் கவிஞர் காமகோடியான் நேற்றிரவு வயதுமூப்புக் காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை மூலம் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ”கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்பதைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். என்னுடைய இசையில் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். அன்னார் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. அவரைப் பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.