புதிய ஆட்சிக்கு நாம் தயார்! – மைத்திரி அதிரடி அறிவிப்பு.
“நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.”
Reporter no.222 Attached file இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குருநாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு இன்று நடந்தது, நாளை நமக்கும் நடக்கலாம். எதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அரசை விமர்சிப்பதற்கு எனக்குத் தகுதியில்லை எனவும், நீங்களும் ஜனாதிபதியாக இருந்தவர்தானே எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எனது தலைமையில் அமைந்த ஆட்சியானது மாறுபட்டதொன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் அவ்வாறானதொரு அரசு இன்னும் அமையவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்பட்டன. தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.
இந்த அரசு கொண்டுவந்த அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு நாட்டுக்குக் கிட்டும்” – என்றார்.