அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு: பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு
நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் செல்வபெருந்தகை, .விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன் மற்றும் பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி – ஜி.கே. மணி, பாரதி ஜனதா கட்சி – வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் – பூவை ஜெகன்மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி – வேல்முருகன், மதிமுக – சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தளி ராமசந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காதது தொடர்பாக பேசிய திமுக அமைச்சர் துறைமுருகன், உள்துறை அமைச்சர் நம்மை சந்திக்காதது அனைத்து கட்சிக்கும் அவமானம் தான், ஆனால் இனமானத்திற்காக அவமானம் படலாம். மீண்டும் சந்திக்க முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது இது மாநில சுயாட்சிக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சிகளைப் பெற வசதி உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், 12 ஆண்டுகள் படிக்க கூடிய பள்ளி கல்வியால் எந்தவித உபயோகமும் இல்லை.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்க தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.