காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவை கடும் பாதிப்பு…!
காஷ்மீரில் அதிகளவு பனி பொழிந்து வருவதால் சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று காலை முதல் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனி மூடியுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலைச்சரிவுகளில் இருந்து பாறை துகள்கள் அதிவேகத்தில் கீழே விழுந்து வருகின்றன.
இதன்காரணமாக அந்த சாலையில் மூன்றாவது நாளாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பனிபொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்ரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ் தேவி கோவிலில் பனிப்பொழிவு காரணமாக பேட்டரி கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சோபியான் நகரில் பனிப்பொழிவால் முழங்கால் அளவுக்கு சாலைகளில் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. சாலையோரம் நிறுத்தப்பட்ட கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு பனி போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள அடல் சுரங்கப் பாதையில் வலது மற்றும் இடது புற நுழைவு வாயிலில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பனிப்பொழிவால் சிக்கித் தவித்தனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் மீட்டனர்.