மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

மார்க்சிஸ்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக திகழ்கிறர். இவரை பாராட்டி தமிழக அரசு கடந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதும் ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கியது. ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு சங்கரய்யா வழங்கினார்.

100 வயதை கடந்த சங்கரய்யா சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இரண்டு தினங்களாக சங்கரய்யாவுக்கு லேசான காய்ச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன். தோழர் அவர்களைக் கவனித்துக் கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன்’ என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.