100 புதிய சைனிக் பள்ளிகள்: ராஜ்நாத் சிங்
ஆயுதப்படைகளில் பெண்கள் சேருவதை அதிகரிக்கும் வகையில், 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
சைனிக் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சோ்த்துக் கொள்ளவும், பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்புகள் வழங்கவும், ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் அரசு தொடா் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சைனிக் பள்ளிகளை திறப்பது என்ற முடிவு, நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற தங்களது கனவை நனவாக்க பெண்களுக்கு ஊக்கமளிக்கும்.
நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. குழந்தைகளை, நாட்டின் தகுதிவாய்ந்த குடிமக்களாக மாற்றுவதில் சைனிக் பள்ளிகள், முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்க, இளைஞா்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது’ என்றாா் அவா்.