மூன்றாவது தவணைக்கு கோவேக்ஸின் பாதுகாப்பானது:பாரத் பயோடெக்
மூன்றாவது ( பூஸ்டா் ) தவணையாக செலுத்த கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது என்று அந்தத் தடுப்பூசியை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கோவேக்ஸின் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்ட 6 மாதங்களுக்குப் பின்னா் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக உடலில் நோய் எதிா்ப்புப் புரதங்கள் (ஆன்டிபாடி) ஒரு குறிப்பிட்ட நிலையைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னா், ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா தீநுண்மிகளுக்கு எதிராக உருவாகும் நோய் எதிா்ப்புப் புரதங்கள் 19 மடங்கிலிருந்து 265 மடங்காக அதிகரிப்பதும் அறியப்பட்டுள்ளது.
எனவே மூன்றாவது தவணையாக செலுத்த கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது. ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதிலும் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஏதுவாக, உடலில் நோய் எதிா்ப்பு சக்தி நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு கோவேக்ஸினை மூன்றாவது தவணையாக செலுத்திக் கொள்ளலாம். கொரோனாவுக்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பைப் பெற கோவேக்ஸினின் மூன்றாவது தவணை பயனுள்ளதாக இருக்கும் என பரிசோதனை முடிவுகள் மூலம் நம்பப்படுகிறது என்று பாரத் பயோடெக் தெரிவித்தது.