டீன் எல்கரும் தென்னாபிரிக்க பேட்டிங் பாரம்பரியமும்!
ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அது வரலாற்று ரீதியிலானதாகவும் அந்த நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்ததாகவும் அமையும். அப்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு என்று சில அடிப்படையான அம்சங்களை அடையாளப்படுத்த முடியும். ஒருகாலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்த தென்னாபிரிக்க, ஆரம்பகாலம் தொட்டே வேகப்பந்து வீச்சுக்கு பெயர் போன அணி. பீட்டர் ஹெயின்-நீல் அட்காக் தொடங்கி இன்றைக்கு ககிசோ ரபாடா-டுனே ஓலிவர் வரை அந்த அணி தொடர்ந்து வலிமையான வேகப்பந்து இணைகளை உருவாக்கி வந்துள்ளது.
தென்னாபிரிக்காவின் பீல்டிங் பாரம்பரியமும் ஒரு தேவையின் பொருட்டு ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுதான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அணியின் பீல்டிங் புரட்சிக்கு முன்னெடுப்புகளை செய்தவர் தென்னாபிரிக்க முன்னாள் கேப்டன் ஜேக் சீத்தாம். தென்னாபிரிக்காவின் வலிமை குறைவான பேட்டிங் வரிசையின் குறையை ஈடுகட்டி பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதற்காக பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தியவர். அது பின்னர் 90-களில் ஜான்டி ரோட்ஸ் வருகையின் மூலமாக புதிய உச்சத்தை தொட்டது. இன்றைக்கு மார்க்ரம் போன்ற சில நல்ல பீல்டர்கள் இருந்தாலும் தென்னாபிரிக்காவின் கடந்த காலத்துடன் அதனை ஒப்பிட்டு விட முடியாது.
காலிஸ், பொல்லாக் மாதிரியான ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதிலும் அந்த அணி ஒரு தனித்த பாரம்பரியத்தை கொண்டிருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமில்லாத தட்ப வெப்பநிலையும் தேவைக்கு அதிகமான வேகப்பந்து வீச்சாளர் கூட்டமும் ஆல் ரவுண்டர் வகைமையை நோக்கி கிரிக்கெட் வீரர்களை தள்ளியது. எப்படி 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற googly quartet உடன் வழக்கொழிந்து போனதோ அப்படி இன்றைக்கு ஒரு தரமான ஆல்ரவுண்டர் கூட இல்லாத நிலைக்கு தென்னாபிரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இந்தவொரு சூழ்நிலையில்தான் டீன் எல்கர் பேட்டிங்கின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். நல்ல வேகப்பந்து வீச்சுப்படை உள்ளது; ஆசிய களங்களில் விக்கெட் எடுத்துக் கொடுக்க ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர் இருக்கிறார்; ஆனால் பேட்டிங் வரிசை சிதிலமடைந்து போயுள்ளது.
தென்னாப்பிரிக்க பேட்டிங் பாரம்பரியத்துக்கு பேரி ரிச்சர்ட்ஸ், கிரேம் பொல்லாக், டி வில்லியர்ஸ் மாதிரியான சில ஸ்டைலிஸ்டுகள் புகழ் சேர்த்துள்ளனர். ஆனால் தென்னாபிரிக்காவின் உண்மையான பேட்டிங் பாணி என்பது தடுப்பாட்டம் தான். அந்த தடுப்பாட்டம் கூட அழகியல் பூர்வமானதாக இருக்காது. உதாரணமாக ஒருவரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கேரி கிரிஸ்டன். களத்தில் தத்தித் தாவி, அடி வாங்கிக் கொண்டு போராடி ரன் ஈட்டுவது தான் தென்னாபிரிக்க பேட்டிங் பாணியாக கருதப்படுகிறது. இதனால்தான் ஸ்டீவ் வா, புஜாரா மாதிரியானவவர்களை தென்னாபிரிக்கர்களுடன் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒப்பிடுகின்றனர். 2000-த்தின் மத்தியில் ஸ்மித் தலைமையில் இருந்த அணியில் இந்த நிலைமை வெகுவாக மாறியது. ஆனால் இன்றைக்கு ஆம்லா, டு பிளசிஸ் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அந்த அணி கடந்த காலத்திற்கு திரும்பியுள்ளது.
டீன் எல்கரின் பேட்டிங்கில் ரசிக்கும்படியான ஒரு அம்சமும் கிடையாது. மார்க்ரம், டி காக் ஆகியோரை போல ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவரும் அல்ல. ஆள் கூட ஏதோவொரு நடுத்தர வயது விவசாயி போலத் தான் காட்சிதருவார். கீகன் பீட்டர்சன், மார்க்ரம் போன்றவர்களின் ஆட்டத்தில் இருக்கும் தளுக்கும் கிடையாது. ஒரு நளினமான கவர் டிரைவையோ ஒரு சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட ஆன் டிரைவையோ அவருடைய ஆட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. திராவிட் போல ஒரு சரியான கால்பாடம் கூட எல்கரிடம் கிடையாது. ஆனால் உயிரைக் கொடுத்தாவது அணியைக் கரை சேர்த்துவிடுவார். தனது ரன்னுக்காக அதிக உழைப்பை கொடுத்தும் அதற்கான அங்கீகாரத்தை பெறமுடியாத ஒரு பேட்ஸ்மேன் இன்றைய காலகட்டத்தில் எல்கராகத்தான் இருக்க முடியும்.