கொரோனா பரவல் அதிகரிப்பு.. புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!
கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்ததையடுத்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு புதுச்சேரியில் கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து தற்போது உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. 1-ம் தேதி 10 பேர், 2-ம் தேதி 20 பேர் வீதம் தொற்று உயர்ந்து இன்று மட்டும் 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சமூக அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கருத்தை சுகாதாரத்துறை முன்வைத்தது.
இதன் அடிப்படையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயன் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்படும் எனவும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.