கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ஆரம்பம்.

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புதிய ரயில் S13A இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த புதிய ரயிலினை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் இந்திய தூதரக பிரதி உயர் ஸ்தானிகர் ஆகியோர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 5.10 மணியளவில் ஆரம்பத்து வைத்தனர்.
இந்நிலையில் பயணித்தை தொடர்ந்த ரயில் நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை இன்று புதிய ரயில் மூலம் மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன்மூலம் 550 பயணிகள் பயணிக்க முடியும்.
முதலாவது சேவையில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதேச போக்குவரத்து அதிகாரியை யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் வரவேற்றார்.
இதேவேளை கடந்த 2 ஆம் திகதி யாழ்தேவி ரயில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட M11 locomotive இன்ஜினுடன் புதிய ரயில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.