வாக்குகளைப் பெற ஈஸ்டர் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டதா என சந்தேகம்?: கர்தினால் மெல்கம் (Video)
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தப்பட்டதா என சந்தேகமாக உள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜூம் தொழில்நுட்பம் வழியான கருத்தரங்கில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களுக்கு அறிவூட்டுவதற்காக நேற்று ஜூம் தொழில்நுட்ப மாநாட்டிற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமை தாங்கினார்.
பேராயர் அப்போதே கீழ் கண்டவாறு கருத்து தெரிவித்தார் ,
“சஹாரானை கைது செய்வதற்கான பிடியாணையை வைத்திருந்த போதே பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நாட்டில் அச்சத்தையும் , நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் நோக்கில் கிடைத்திருந்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படவில்லை என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலை முஸ்லிம் தீவிரவாதிகள் செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதை தெரிந்தே தகவல்களை மறைத்து மக்களின் வாக்குகளைப் பெற , தாக்குதலை நடத்த இடமளிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாக்குதலுக்கு 60% பொறுப்பு. இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் இதை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்து மேலதிக தகவல்களைப் பெற விரும்பவில்லை. ”