“அறிந்திரா தொற்றுப் பரவலிலிருந்தும் நாட்டு மக்களைக் காத்தோம்…”
இனம் தெரியாத தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றி மக்கள் உயிர்வாழும் சுதந்திரத்தை இருமுறை வழங்கிய ஜனாதிபதி அவர்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று, மிரிசவெட்டிய விஹாராதிகாரி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி வணக்கத்துக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மிரிசவெட்டிய விஹாராதிகாரி தேரரைச் சந்தித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நாடு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, தொற்றுநோய்க்கு அச்சப்படாமல் மக்கள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளித்திருப்பது, ஏனைய உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்க்கை முறையைக் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டங்கள் ஆத்ம சக்தியாக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்காமல் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அத்துடன், பொருளாதாரத்தை நிர்வகித்துக்கொண்டு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும் என்றும் தேரர் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் லங்காராம விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு, அதன் விஹாராதிகாரி வணக்கத்துக்குரிய ரலபனாவே தம்மஜோதி நாயக்கத் தேரர், பிரித் பாராயணம் செய்து, ஆசிர்வாதம் அளித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், ஜனாதிபதி அவர்கள் இதன்போது தேரரிடம் எடுத்துரைத்தார்.
அதனையடுத்து, அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வண. நுகேதென்னே பஞ்ஞானந்த தேரரையும் சந்தித்து ஜனாதிபதி அவர்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
உலகில் அதிக கேள்வி நிலவும் நொரிடாகே பீங்கான் உபகரணங்கள், ஜப்பான் நிறுவனமொன்றினால் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, உயர்தரத்தைக் கொண்ட டைல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் வருடத்தில், நாட்டுக்குத் தேவையான டைல்களை தேசிய நிறுவனங்களின் மூலம் வழங்க முடியுமென்று ஜேதவனாராமாதிபதி வண. இஹல ஹல்மில்லேவே ரத்தனபால தேரரைச் சந்தித்து உரையாடும் போது ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சேதனப் பசளை விவசாயத்துக்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஜேதவனாராமாதிபதி தேரருக்கு ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அபயகிரி விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், விஹாராதிபதி கலாநிதி வண. கல்லஞ்சியே ரத்தனசிறி தேரரைத் சந்தித்துக் கலந்துரையாடினார். அநுராதபுரம் புண்ணிய பூமிக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, முறையான போக்குவரத்துத் திட்டத்துடன் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அவசியத்தைத் தேரர் சுட்டிக்காட்டினார்.
ரஜரட்ட வலயத்தில் மாத்திரம், மூவாயிரத்து முன்னூற்று இருபத்து இரண்டு பெரிய, நடுத்தர மற்றும் சிறிய குளங்கள் காணப்படுகின்றன. அவற்றை மறுசீரமைத்து விவசாயப் பொருளாதாரத்துக்கு பங்களிக்கச் செய்வது தொடர்பிலும் தேரர் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
உரிய நேரத்தில் சரியான முடிவுகளை ஜனாதிபதி எடுப்பார் என மஹா சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர் என்றும், ரத்தனசிறி தேரர் இதன்போது எடுத்துரைத்தார்.