இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்… வல்லுனர்கள் கணிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்றை பொருத்தளவில் எப்படி படிப்படியாக அல்லது வேகமாக உயர்கிறதோ அதேபோன்றுதான் படிப்படியாக அல்லது வேகமாக குறையத் தொடங்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக வேகமாக பரவிய கொரோனாவின் மூன்றாவது அலை, மிக வேகமாக முடிவுக்கு வந்தது. அதேபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர் 4-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ் ஏதேனும் வெளிப்பட்டால் அது, 4வது அலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், மகாராஷ்டிராவில் ஜிம், சலூன், அழகு நிலையங்களை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு 50 சதவீத பணியாளர்களுடன் ஜிம், சலூன்கள், அழகு நிலையங்களை இயக்குவதற்கு மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்திருந்தது.
டெல்லியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் முழுமையான பொதுமுடக்கம் ஏதும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதேநேரம் பொதுமக்கள் மாஸ்க் அணிய தவறுதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் இருத்தால் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊரடங்கு நிச்சயம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.