கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளாக கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்டவை மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இலவசமாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசிகளுக்காக, கோவின் இணைய தளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அரசால் ஏற்படுத்தப்படும் முகாம்களில் நேரடியாக சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரங்கள் ஆதார் பதிவுடன் கோவின் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆதார் மற்றும் மொபைல் தொடர்பான விபரங்களை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பி.டி.எப். ஃபார்மேட்டில் இருக்கும் இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் மற்றும் சான்றிதழுக்கான கியூ.ஆர். கோடு மற்றும் தடுப்பூசி செலுத்திய விபரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் 5 மாநில தேர்தலையொட்டி, இந்த சான்றிதழிலில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அளிக்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருக்கும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெபறும். பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.