நிலவில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தது சீன விண்கலம் !

நிலவின் தரைப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீனா விண்கலம் கண்டறிந்துள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு நிலவில் ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் மற்றும் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது குறித்த மனிதகுலத்தின் முயற்சிக்கு ஒரு சிறந்த செய்தி என இது குறித்துக் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறினர். நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 (Chang’e-5) என்ற விண்கலத்தை 2020 -ஆம் ஆண்டு நவம்பரில் சீனா அனுப்பியது.
நிலவின் மத்திய உயா் அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய விண்கலத்தின் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னா், 1, 731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.
அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா். அதன் முடிவுகள் சயன்ஸ் அட்வான்சஸ் (Science Advances) இதழில் வெளியாகியுள்ளது.
அதன்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீா் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். அதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.