சர்வஜன வாக்கெடுப்பு பிரேரணைக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கூட்டணி?
ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ள பொதுவாக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விரயமான காலத்திலிருந்து மீள்வதற்கு, மேலும் 2 வருடங்களை நீடிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இளைஞர் ஒருவர் தன்னிடம் பரிந்துரைத்ததாக , ஜனாதிபதி கடந்த வாரம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் சர்வஜன வாக்கெடுப்பு பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் சக்திவாய்ந்த வர்த்தகர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழு பாரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி , மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன் அவர்கள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன், சர்வஜன வாக்கெடுப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டால் தோற்கடிக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் சர்வஜன வாக்கெடுப்பு பிரேரணைக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.