அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் குறைவாக தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மட்டும் 12,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கணிசமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கொரோனா பரவலின் மூன்றாவது அலை என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறன்று முழு பொதுமுடக்கம், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டது.
கடந்த 2020 மற்றும் கடந்த 2021 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டது.
இந்த சூழலில், பல்கலைக் கழக தேர்வுகள் நேரடியாக நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதிக்கு பின் நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி தேர்வு நடைபெறும் தேதி கொரோனா தாக்கத்தைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு தேதி அறிவிக்கப்படும்.
மாணவர் நலன் கருதி எடுக்கப்படும் முடிவு என்பதால் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் இந்த முடிவு பொருந்தும். அரசின் உத்தரவை மீறி தேர்வுகள் நடத்தப்பட்டால் கல்லூரி மூடுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பால், மீண்டும் எப்போது வகுப்புகள் தொடங்கும் என்பதும் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதும் மீண்டும் விடைதெரியா கேள்வியாக மாறியுள்ளது
ஒத்தி வைப்பதால் பாதிப்பே ஏற்படும் :கல்வியாளர்கள் கருத்து
தற்போதைய நிலையில் இன்னும் சில வாரங்கள் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தேர்வுகள் வழக்கமாக நடத்தப்படும் காலகட்டத்தை கடந்து நடத்துகின்ற போது நம் நாட்டில் நடைபெறும் GATE,CAT போன்ற நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கல்லூரி வகுப்புகள் தொடங்கிவிடும் என்பதால் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அரசின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் வழி தேர்வு மாணவர்களுடைய கல்விச் சூழலை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிவிக்கும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு நேரடி வழியில் தேர்வு நடத்தப்படும் வேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டை தாங்கள் ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
காலவரையின்றி தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள சூழலில் தமிழக அரசு உடனடியாக பேராசிரியர்கள், கல்வியாளர்களை அழைத்து கலந்தாலோசனை செய்து, நடப்பாண்டில் மாணவர்களுக்கு தேர்வு ஆன்-லைன் வழியில் நடத்தப்படுமா அல்லது நேரடி முறையில் நடத்தப்படுமா என்பது குறித்து உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.