வில்லியம்சனுக்கு அடுத்து இவர்தான்!
பாரதிராஜா படங்களில் வரும் வயல்வெளிகள் போல ஆடுகளம் பச்சைப் பசேலென இருந்தாலும் சரி… இல்லை பாலா படங்களில் வருவது போல பாலைவனமாக இருந்தாலும் சரி… நான் அனைத்திலும் ஆடும் ஆல் இன் ஆல் அழகுராஜா என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர் நியூசிலாந்தின் டாம் லாதம். தொடக்க வீரர்கள் இப்படித்தான் ஆடவேண்டும் என்று லாதமின் கேமை வைத்து ஒரு புத்தகமே வெளியிடும் அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக இவரது ஆட்டம் இருந்து வருகிறது. இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் பாரம்பரியமிக்க நாடுகளிலேயே தொடக்க வீரர்கள் இலவச விக்கெட்டாக இருந்துவரும் நிலையில் சத்தமில்லாமல் ஓப்பனராக ஜொலித்து வருகிறார் லாதம்.
ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்த வங்கதேசம் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று கேள்வி எழுந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததும் ஆடுகளம் புல்வெளி போல மாற்றப்பட்டது. இதைப் பார்த்து பந்துவீச்சை வங்கதேச கேப்டன் தேர்வு செய்து லாதம் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார். “அவனுகளால எவ்வளவு அடிக்க முடியுமோ அவளோ அடிச்சாங்க” என்று வங்கதேசம் புலம்புமளவிற்கு 526 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. அதற்கு முக்கிய காரணம் லாதம் அடித்த 252 ரன்கள்.
சங்கக்கரா, லாரா போன்ற கண்கவர் ஷாட்டுகளை எல்லாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது. டீன் எல்கர் போலத்தான் இவரும். சீக்கிரம் அவுட் ஆகி விடுவது போலத் தான் இருக்கும். ஆனால் இவர் களத்தில் நிற்கும் ஒவ்வொரு பந்தும் எதிரணிக்கு ஆபத்து தான். அதற்கு நல்ல உதாரணம் நடந்து முடிந்த இந்திய தொடர். முதல் போட்டியில் நியூசிலாந்து தோல்வியைத் தவிர்த்து டிரா செய்ததற்கு லாதமின் இரண்டு அரை சதங்கள் முக்கிய காரணம். அந்த ஒரு டெஸ்டில் மட்டும் 428 பந்துகளை சந்தித்து இருந்தார் அவர். கடினமான ஸ்வீப் ஷாட்களை… அதுவும் அஷ்வின் போன்ற பந்துவீச்சாளருக்கு எதிராக திறம்பட அடிப்பதில் வல்லவர் இவர். வில்லியம்சனுக்கு அடுத்து நியூசிலாந்து அணியின் மிகமுக்கிய வீரர் இவர். அதனால்தான், அவர் இல்லாதபோது இவரே கேப்டனாகவும் இருக்கிறார். அனைத்து தரப்பிலும் வில்லியம்சனின் இடத்தை நிரப்புகிறார்!