வாட்ஸ் அப்பில் பரவிய போட்டோ.. ஷாக்கான உதவி வேளாண்மை பெண் அலுவலர் – மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
புதுக்கோட்டையை சேர்ந்த உதவி வேளாண்மை பெண் அலுவரின் மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார்(19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அனுகீர்த்தனா (24) என்ற பெண் மணமேல்குடியில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அனுகீர்த்தனாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மனோஜ் குமார் அவரது மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்து விட்டதாகவும் அதனால் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
உதவி வேளாண்மை அலுவலரான அனுகீர்த்தனா பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் மின்னஞ்சலில் சேமித்து வைத்திருந்த அந்த பெண்ணின் புகைப்படங்களை அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மனோஜ் குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.