தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பரவல் 10 மடங்காக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பரவல் 10 மடங்காக அதிகரித்துள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்து 489 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையை விட கூடுதலாக ஆயிரத்து 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 547 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 ஆக ஆனது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில், மரணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 866 ஆகியுள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரானால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185 ஆக நீடிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டங்களைப் பொறுத்தவரை, சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 186 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திங்கட்கிழமை 6 ஆயிரத்து 190 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ஆயிரத்து 696 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டை தொடர்ந்து திருவள்ளூரிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, திருவள்ளூரில் ஆயிரத்து 54 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 602 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் 508 பேரும், திருச்சியில் 348 பேரும், மதுரையில் 330 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னையில் 4 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தாம்பரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பம்மலில் தூய்மைப் பணியாளர்கள் 17 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.