பால் மாவுக்கு பதிலாக பாலை பயன்படுத்துங்கள் என்கின்றது அரசாங்கம்!
சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அனைவரும் திரவப் பாலை பயன்படுத்த வேண்டும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பால் மாவை உட்கொள்ளும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகக் கூறினார்.
இதேவேளை எந்தவொரு அரசாங்கமும் பொருட்களின் விலைகளை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை விரும்புவதில்லை என தெரிவித்தார்.
கொரோன தொற்றும் டொலர் தட்டுப்பாடுமே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என குறிப்பிட்ட அமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொரோனா காரணமாக இலங்கை இழந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மூன்று மாதங்களில் வழமைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை வெளியிட்டார்.
சவால்களை முறியடித்து நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதில் தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் அமைச்சர் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.