சு.க. தலைமையில் ஆட்சி! – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனிநபரால் நாட்டை நிர்வகிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் இணைந்தால்கூட, மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்கள் வெற்றியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கொழும்பில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவியது. எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே அன்று இருந்தனர். அதன்பின்னர் கட்சி மீண்டெழுந்தது. தற்போது 14 உறுப்பினர்கள் இருக்கின்றோம். 1977ஐ விட சிறந்த நிலையில் உள்ளோம். எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும்.
நல்லாட்சியின்போது பல திட்டங்களை முன்னெடுத்தோம். சேவைகளை செய்தோம். தற்போதுபோல் அமைச்சுகளின் செயலாளர்கள் பதவி விலகவில்லை. விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக அமைச்சுப் பதவிகள் அன்று பறிக்கப்படவில்லை” – என்றார்.