திருநங்கைகளுக்கு சிறையில் தனி குளியலறை, கழிப்பிடம் அமைக்க உத்தரவு
திருநங்கைகளுக்கு (both transmen & transwomen) சிறைகளில் தனி சிறை, குளியலறை மற்றும் கழிப்பிடம் அமைக்க உத்தரவிட்டு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருநங்கை பாதுகாப்பு சட்டம் 2019ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. அவர்களுக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருநங்கைகளை சோதனை செய்யும் போது, அவர்கள் விரும்பும் ‘பாலின’ அதிகாரி அல்லது பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர் மூலம் சோதனை செய்ய வேண்டும் எனவும், strip-search தேவைப்படும் இடங்களில், தனிப்பட்ட அறையில் அல்லது மறைக்கப்பட்ட இடத்தில் செய்யப்பட வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும் நபரின் பாலினத்தை தீர்மானிக்க strip – search சோதனையை பயன்படுத்தக் கூடாது எனவும் திருநங்கைகளில் சுய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சிறைத்துறையின் பதிவேடுகளில் ஆண், பெண் என்பதுடன் திருநங்கை என்னும் வகையும் சேர்க்கப்பட வேண்டும். சிறையில் உள்ள திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினர் உடனும், நண்பர்கள், சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய செயல்முறைகளால் திருநங்கை சமூகத்தினர் சிறைச்சாலைகளில் உள்ள மற்ற கைதிகளால் தனிமைப்படுத்தபடாமல் இருப்பதையும், இழிவுபடுத்த படாமல் இருப்பதையும் சிறைச்சாலை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.