சீன எல்லை பகுதியில் திரளும் பயங்கரவாதிகள்.

வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் சீன – மியான்மர் எல்லையில் மீண்டும் ஒருங்கிணையும் முயற்சிகள் நடந்து வருவதாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் சஞ்சீவ் கிருஷ்ண சூட் கூறியதாவது: அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட அமைதி பேச்சால் பயங்கரவாத செயல்கள் குறைந்து, அமைதி திரும்பியது.
ஆசியாவில் தனக்கு போட்டியாக இந்தியா வந்துவிடும் என சீனா அஞ்சுகிறது. அதனால் இந்தியாவில் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மணிப்பூரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டியுள்ளன.
சீன – மியான்மர் எல்லையில் இந்த பயங்கரவாத அமைப்புகள் ஒருங்கிணையத் துவங்கியுள்ளன. இதற்கு சீனா மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் சீன – மியான்மர் எல்லையில் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். எனவே எல்லை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.