இவ்வருடத்துக்குள் மாகாணத் தேர்தல்! – கோட்டாபய அரசு உறுதி.
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அறிவித்தது.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண அரசின் மேற்படி நிலைப்பாட்டை அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இரு பிரதான விடயங்களைக் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதலாவது விடயம் சுகாதாரப் பாதுகாப்பு.
அடுத்ததாக உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தில் இரு வருடங்கள் கடந்த ஆட்சியின் கீழ் சென்றது. இதனால் உள்ளூராட்சி சபைகளால் உரிய வகையில் செயற்பட முடியாமல்போனது. அடுத்த இரு வருடங்கள் கொரோனாப் பாதிப்பு. எனவே, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்குச் சேவையை வழங்குவதற்குக் காலம் வழங்க வேண்டும். அந்தவகையில்தான் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்டம் கடந்த ஆட்சியின்போதுதான் திருத்தப்பட்டது. எனவே, அதனை மீண்டும் திருத்தாது தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலைமை உள்ளது. இது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி இந்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” – என்றார்.