துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்…
“அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்…” – பிரதமர் தெரிவிப்பு
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், இன்று (12) காலை ஆரம்பிக்கப்பட்டது.
முனையத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களினால் நினைவுக் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த முனையத்தின் கட்டுமானப் பணிகளை, 2024ஆம் ஆண்டில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது, 75 ஹெக்டயார் பரப்பளவில் 1,320 மீற்றர் நீளத்தைக் கொண்டுள்ளது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், கப்பலில் இருந்து கரை வரை இயக்கப்படும் 12 பளுதூக்கிகள் (STC) மற்றும் தண்டவாளங்களில் இயங்கும் 40 கிரேன் பளுதூக்கிகளுடன் (RMG) ஒரு முழுமையான முனையத்தை இலங்கைத் துறைமுக அதிகார சபை கொண்டிருக்கும். இதற்கான மொத்தச் செலவு 510 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதோடு, துறைமுக அதிகார சபை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்க எதிர்பார்த்திருக்கிறது.
அக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி (Access Engineering PLC) மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி (China Harbour Engineering Company LTD) இணைந்து இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், “கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை மறந்துவிட்டு, அடுத்த மூன்று வருடங்கள் குறித்து நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
“எதிர்கட்சிகளுக்கே கடந்த காலம் முக்கியமானது. நாம் எப்போதும் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், கடந்த காலத்தை அல்ல. நாட்டைப் பற்றிய நம்பிக்கையை யாரும் கைவிடக் கூடாது. கடந்த இரண்டு ஆண்டுகளை விமர்சகர்களுக்கு விட்டுவிட்டு, எதிர்காலத்தை நம் கையில் எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.
“துறைமுகங்களின் தரவரிசைக்கான தற்போதைய அல்ஃபலைனர் அளவுகோலின்படி, உலகில் 23ஆவது இடத்தில் கொழும்புத் துறைமுகம் உள்ளது. புதிய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 13ஆவது இடத்தைப் பெறும்” என, நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.