பெண்ணிடம் கணவரின் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையே.. உச்சநீதிமன்றம்
பெண்ணிடம் கணவரின் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையாகவே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை தெரிவித்துள்ளது. வீடு கட்ட பணம் கேட்பதை வரதட்சணைக் கோரிக்கையாகக் கருத வேண்டும் என்று ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
வரதட்சணை என்ற வார்த்தைக்கு, சட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது எந்த வடிவத்திலான, மதிப்புமிக்க எதை வாங்கினாலும் அதனை வரதட்சணையாகவே கருத வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வீடு கட்ட பணம் கேட்டு கணவர் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்ட பெண் தொடர்பான வழக்கில், டிசம்பர் 2003ல், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம், 304 பி, 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 498 ஏ (கணவன் அல்லது கணவரின் உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு எதிரான கொடுமை) ஆகிய இரண்டு ஆண்களையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். செப்டம்பர் 2008 இல், வீடு கட்ட பணம் கேட்பதை வரதட்சணைக் கோரிக்கையாகக் கருத முடியாது என்று கூறியது. 304பி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாகக் கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.
எனினும், இந்த விவகாரத்தில் செஷன்ஸ் நீதிமன்றத்தின் விளக்கம் சரியானது என்று உச்ச நீதிமன்றம் கருதியது மற்றும் பிரிவு 304B இன் கீழ் தண்டனையை உறுதி செய்தது.
பெண் வீட்டாரிடம் சொந்த வீடு கட்ட பணம் கேட்பதையும் வரதட்சணைக்கு உள்ளாக கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். வரதட்சணை போன்ற சமூக கேடுகளை வேரோடு பிடுங்கும் அளவிற்கு ஐபிசி 304 பி பிரிவில் அதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வரதட்சணையை ஊக்குவிக்கும் சட்ட விளக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது, மிகவும் மோசமான குற்றச் செயல் என்றும் சாடியுள்ளார். வரதட்சணை வழக்குகளை நீதிமன்றங்கள் விசாலமான முறையிலும் விரிவான முறையிலும் அணுகும் படி அதில் சட்ட செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.