முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் அண்மையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தில்லி மற்றும் உத்தரகண்ட் போலீஸாருக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஜூனா அகாரா ஆசிரமத் தலைவர் யதி நரசிம்மானந்த் கிரி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி மத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பலர், இந்தியாவை ஹிந்து தேசமாக்க வேண்டும் என்று கூறியதோடு, முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் வன்மத்துடன் பேசினர். இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தரகண்ட் போலீஸார் யதி நரசிம்மானந்த் கிரி, தர்மதாஸ் மகராஜ், அன்னப்பூர்ணா உள்ளிட்டோர் மீது இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல, தில்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற மத நிகழ்விலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுதொடர்பான புகாரின் பேரில், தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் குர்பான் அலி, பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்குரைஞருமான அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களுக்கு எதிராக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபோதும், உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்பு விசாரணைக் குழு மூலமாக சுதந்திரமான, நம்பகமான, பாகுபாடற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “இதுபோன்ற மத நிகழ்வுகள் தினசரி அடிப்படையில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. வரும் 23-ஆம் தேதி அலிகாரில் ஒரு மத நிகழ்வு நடத்தப்பட உள்ளது. அதனை அனுமதிக்கக் கூடாது. மக்கள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவம் நடைபெறாததை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு அதிகாரி ஒருவரை அனைத்து மாநிலங்களும் நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் 2019 உத்தரவை மாநிலங்கள் முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “தொடர்ந்து மத நிகழ்வு நடத்தப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதற்கான அனுதியை உங்களுக்கு அளிக்கிறோம். அதனடிப்படையில், அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும்’ என்று கூறி, இந்த மனு மீது மத்திய அரசு, தில்லி மற்றும் உத்தரகண்ட் போலீஸார் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 10 நாள்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.