அடுத்த 4 வாரங்களுக்கு உலகளவில் அனைத்து அலுவலகங்களையும் மூடும் விப்ரோ நிறுவனம்!
விப்ரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் முதல் தங்களது மூத்த நிர்வாகிகளை மீண்டும் அலுவலகத்திற்கு வர வைத்து பணிபுரிய வைத்து வருகிறது. தொடர்ந்து, அக்டோபரில் அந்நிறுவனம் ஜனவரி 2022 முதல் ஊழியர்களை அலுவலகம் வர வைக்கும் முயற்சியை விரைவுப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது. எனினும், தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் அந்த முயற்சியை விப்ரோ நிறுவனம் கைவிட்டுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐடி நிறுவனமான விப்ரோ, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு வாரங்களுக்கு உலகளவில் தங்களது அலுவகலத்தை மூட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், ஊழியர்களை அலுவலகம் வர வைக்கும் முயற்சியை திரும்ப பெறவதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தியரி டெலாபோர்ட் கூறியுள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் செப்டம்பர் மாதம் முதல், வாரம் இருமுறை அலுவலகத்திற்கு வருகின்றனர். மொத்தத்தில், 3 சதவீத பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகின்றனர்.
விப்ரோ ஊழியர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் மற்றும் 85 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.
2022ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ.2,970 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது, முந்தைய காலாண்டில் ரூ.2,931 கோடியாக இருந்தது, இப்படி ஆண்டுக்கு ஆண்டு அந்நிறுவனத்தின் நிகர லாபம் சீராக இருந்து வருகிறது.
2022ம் ஆண்டுக்கான வருவாய் மட்டும் ரூ. 20,432.3 கோடியாக வந்தது, இது முந்தைய காலாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.19,667 கோடியை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விப்ரோ ரூ.15,670 கோடி வருவாய் ஈட்டியதால், இந்த எண்கள் ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீத வளர்ச்சியைக் குறிக்கின்றன.