2005இல் பிரபாகரனே என்னை வீழ்த்தினார்! – ஐ.தே.க. தலைவர் ரணில் குற்றச்சாட்டு.
“2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னைத் தோற்கடிக்க வைத்தார்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவால் ஏன் இன்னும் ஜனாதிபதியாக முடியாமல் உள்ளது என ‘சிரச’ ஊடகத்தால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.
அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார்.
அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பொதுவேட்பாளர்கள்தான் களமிறங்கினர்.
இனிவரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. நபர்களைவிடவும் கொள்கைகளே முக்கியம்” – என்றார்.