உடன் தேர்தலுக்குச் செல்லுங்கள்! – அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து.
“இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து சம்பந்தமாக ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக்கும் ஐந்தாண்டுகள்தான் மக்கள் ஆணை உள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புகளை அரசு உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆட்சிக் காலத்தை நீடிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
இந்த அரசை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது எமது பலத்தையும் காட்டுவோம்” – என்றார்.