மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை…..
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு அமைச்சு 127 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மல்டிபரா கண்காணிப்பான்கள், உயர் பாய்வு ஒட்சிசன் நாசி சிகிச்சை இயந்திரங்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள், ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் ஏனைய பல பொருட்கள் உட்பட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
சீனா முன்னர் நன்கொடையாக வழங்கிய கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கும் மேலதிகமாக இந்தப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் சீன மக்கள் குடியரசின் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது. சீனத் தூதுவர் கி சென்ஹொங் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து, மருந்தக உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
தொற்றுநோய் ஏற்பட்ட காலம் முதல் சீன மக்கள் குடியரசு இலங்கைக்கு கோவிட்-19 தொடர்பான பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் சீனாவின் வெளிநாட்டு அமைச்சுக்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சீன வெளிநாட்டு அமைச்சுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.