முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை!
நீட் தேர்வுக்கு (NEET Exam) தயாராகி வந்த இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா (23), கடந்த 2015 முதல் 2021-ம் ஆண்டு வரையில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் MBBS படித்து முடித்த இளம் மருத்துவர் ஆவார். இவர், தற்போது வேப்பேரி அடுத்துள்ள சூளை பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து மருத்துவதுறையின் முதுகலை படிப்புக்காக Neet தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இவருடன் தங்கி இருந்த மற்ற இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் பொங்கலை முன்னிட்டு ஊருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்ற மருத்துவர் கார்த்திகா இன்று மாலை வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் நீண்டநேரமாக அறையை தட்டியுள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மருத்துவர் கார்த்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, உடனடியாக விடுதி காப்பாளர் காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் கார்த்திகா, “தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என எழுதி வைத்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இளம் பெண் மருத்துவர் கார்த்திகாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.