கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்களின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை….
கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தொழில் நிமித்தமோ வேறு காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வசிப்பவர்கள் விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடனும் கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு நடவடிக்கைகளுக்காக வேண்டி பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது அத்தியாயத்துக்கு அமைய விண்ணப்பம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை இன்று (14), நாளை, நாளை மறுதினம் தினங்களில் பெற்று பூர்த்தி செய்து பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.
‘ நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வந்து தங்கியுள்ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகார எல்லைக்கு உட்பட்ட அதாவது கொழும்பு மாநகர சபையின் கீழ் வரும் பகுதிகளில், நிரந்தர வதிவாளர்களின் வீடுகளில், வர்த்தக நிலையங்களில், நிறுவனங்களில், அரச மற்றும் தனியார் கட்டுமான வளாகங்களில், தங்கியிருக்கும் அனைத்து தற்காலிக வதிவாளர்களையும் பதிவு செய்ய வேண்டும் ‘ என தெரிவித்தார்.