அவனியாபுரம் ஜல்லிகட்டு: 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்திக் முதல் பரிசான காரை தட்டிச் சென்றார்.
பொங்கல் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியைக் காண மொத்தமே 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 600 காளைகளும் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன.
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறப்பான காளைகள், காளையர்களுக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக இந்த ஜல்லிக்கட்டில் கார் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படுவதாகவும், இதே போல சிறந்த காளைக்கான பரிசாக, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், 24 காளைகளை பிடித்து அவனியாபுரம் வீரர் கார்த்திக், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட முதல் பரிசான காரை தட்டிச் சென்றார்.
19 காளைகளை பிடித்து வலையங்குளம் மாடுபிடி வீரர் முருகன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். விளாங்குடி வீரர் பாரத்குமார் 12 காளைகளை பிடித்து 3வது இடத்தை பிடித்துள்ளார்.