தனியார் தரப்பினரால் 500 அரிசி கொள்கலன்கள் இறக்குமதி..
தனியார் தரப்பினரால் இறக்குமதி செய்யப்பட்ட 500 அரிசி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரி நிவாரணத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த அரிசி தொகையைச் சந்தைக்கு விநியோகித்த பின்னர் அரிசியின் விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரிசி மோசடி இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் செயற்கை விலை உயர்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி 105 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட மாட்டாது என தாம் வாக்குறுதி வழங்குவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார்.
சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு சதொச ஊடாக குறைந்த விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ள போதிலும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை சந்தையின் சில்லறை விலையை மேற்கோள் காட்டி மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் சிவப்பரிசி 155 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்த வாரம் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 167 ரூபா 50 சததத்திற்கும் சிவப்பரிசி 140 ரூபாவுக்கும் மொத்த விற்பனை அடிப்படையில் விநியோகிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.